வியாழன், 14 மே, 2020

மார்த்தாண்டம் சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது



மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜி (வயது 38), தொழிலாளி. இவர், 4 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெஜியை தேடி வந்தனர். இந்தநிலையில், சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான தனிப்படை போலீசார் ரெஜியை கைது செய்தனர்.

செவ்வாய், 12 மே, 2020

குமரி மாவட்டத்தில் நடைபெறும்கொரோனா தடுப்பு பணிகளுக்கு முஸ்லிம் ஜமாஅத் பாராட்டு





குமரி மாவட்ட முஸ்லிம் ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு குமரி மாவட்ட முஸ்லிம் ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். குறிப்பாக குமரி மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்க அனைத்து துறைகளையும் முடுக்கிவிட்டு தடுப்பு பணிகளை செய்து வரும் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவுக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்துக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். கொரோனா வைரசுடன் போராடி வரும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவம் சார்ந்த அனைத்து பணியாளர்களுக்கும், வைரஸ் மக்களை தாக்காமல் இருக்க உழைக்கும் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் போலீசாருக்கு ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




திங்கள், 11 மே, 2020

திருமணமாகாத ஏக்கத்தில் கொத்தனார் தற்கொலை



மணவாளக்குறிச்சி அருகே கல்படி வருக்கத்தட்டை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மகன் விஜயகுமார் (வயது 38). கொத்தனாரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதற்கிடையே விஜயகுமார் கடன் வாங்கி வீடு கட்டினாராம். இதனால் கடந்த சில நாட்களாக கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும், திருமணமாகாத ஏக்கத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





ஞாயிறு, 10 மே, 2020

வீடுகளில் கருப்பு கொடி கட்டி துக்கம் அனுசரிப்பு

ரெயிலில் அடிபட்டு தொழிலாளர்கள் பலி:

வீடுகளில் கருப்பு கொடி கட்டி துக்கம் அனுசரிப்பு



விசாகப்பட்டினத்தில் தனியார் தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்து 11 பேர் இறந்தனர். இதுபோல், அவுரங்கபாத்தில் ரெயிலில் அடிபட்டு 15 தொழிலாளர்கள் பலியாயினர். இந்த சம்பவங்களுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து, தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி துக்கம் அனுசரித்தனர். குமரி மாவட்ட லெனினிஸ்டு செயலாளர் அந்தோணிமுத்து ரீத்தாபுரத்தில் உள்ள தனது வீட்டில் கருப்பு கொடியேந்தி துக்கம் அனுசரித்தார்.


நாகர்கோவிலில் சுவரொட்டி ஒட்ட தடை



நாகர்கோவிலில் சுவரொட்டி ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கூறுகையில், நாகர்கோவில் மாநகராட்சியில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கை கழுவுதல் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் ஓவிய கலைஞர்களை வைத்து விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து உள்ளோம். இந்த ஓவியங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதாக புகார்கள் வந்தன. எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு சுவரொட்டி ஒட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் கொரோனா பாதிப்பு தற்போது முடியக் கூடியதாக இல்லை. எனவே மக்களின் விழிப்புணர்வு மிகவும் அவசியம். எனவே தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதோடு மரத்தில் ஆணி அடிக்கவும் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவையெனில் விளம்பர நோட்டீஸ் அச்சடித்து வினியோகம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி, 8 மே, 2020

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு


தக்கலை அருகே பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் பிளசட் சேம், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி எமி கிராம்டா. இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு உடையார்விளையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

பின்னர், நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு திரும்ப வந்த போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

வியாழன், 7 மே, 2020

முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சார்பில்1,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்


குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள ஏழைகளுக்கு நோன்பை முன்னிட்டு முதல் கட்டமாக 1,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது. அதற்கான பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தலைவர் இப்ராகீம்கான், பொதுச்செயலாளர் பி.ஹிமாம் பாதுஷா, பொருளாளர் நசீர் உசைன், துணை செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான எஸ்.ஆர்.ஹாஜிபாபு, இளைஞர் அணி தலைவர் அயூப்கான், நாகர்கோவில் மாநகர நிர்வாகிகள் ஜாகிர், சேக் முகமது, பசுலுல் கரீம், நவாஸ், சலீம், சேக் உள்பட அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...